இயக்குநர் ஹரி – அருண்விஜய் கூட்டணியில் உருவாகும் “யானை” – பட்டைய கிளம்பும் போஸ்டர்.!!
September 10, 2021
ஹரி மற்றும் அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் யானை படத்தின் போஸ்டர் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் கிராமங்கள் முதல் நகரம் வரை அனைவரும் கொண்டாடும் வகையில் கமர்ஷியல் படங்கள் தருபவர் இயக்குநர் ஹரி. தமிழின் முன்னணி நட்சத்திரங்களை வைத்து மிகப்பெரிய வெற்றிப்படங்களை தந்த இவர் தற்போது தொடர் வெற்றிகளால் முன்னணி நாயகனாக மிளிர்ந்து வரும் நடிகர் நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து ஒரு படத்தை பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறார்கள். ஏற்கனவே ஹரி இயக்கத்தில் ‘சிங்கம்’ பம்பர் ஹிட்டானது இந்நிலையில் இப்படத்திற்கு ‘யானை’ எனபெயரிடப்பட்டுள்ளது, ரசிகர்களிடம் உற்சாக வரவேற்பை பெற்றுள்ளது.
அருண் விஜய், நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானிசங்கர் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சமுத்திரகனி, ராதிகா, யோகிபாபு, KGF புகழ் கருடா ராம், ராஜேஷ், அம்மு அபிராமி, ஜெயபாலன், புகழ், போஸ்வெங்கட், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, ரமா ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு, தூத்துக்குடியில், பழனி, ராமேஸ்வரம் முதலான பகுதிகளில் கடந்த மாதம் முதல் நடந்து வந்தது. இரண்டு பாடல்கள் மற்றும் அனல் அரசுவின் அற்புதமான சண்டை அமைப்பில் மூன்று சண்டைக்காட்சிகள் உட்பட, படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் படமாக்கப்பட்டது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து மீண்டும் தூத்துக்குடி, ராமேஸ்வரம், பழநி பகுதிகளில் நடைபெறுகிறது.
இயக்குநர் ஹரியின் தனித்தன்மை மிக்க பரபர திரைக்கதையில்,
நடிகர் அருண் விஜய் இதுவரை திரையில் கண்டிராத வகையில் , கிராமமும் நகரமும் கலந்த பின்னணியில் குடும்பங்கள் கொண்டாடும் ஆக்சன் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகி வருகிறது.